தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்கள் விற்பனை பெருகியதால் தினமும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தற்போது, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் மது போதையில் அண்ணனை தம்பியே குத்திக்கொன்ற வெறிச்செயல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியில், காந்தி நகரில் வசித்து வருபவர் சேகர். இவருக்கு குமரேசன் (39) மற்றும் மணிகண்டன் என இரு மகன்கள் உள்ளனர். நேற்று அண்ணன் குமரேசன், தனது தம்பி மணிகண்டன் மற்றும் நண்பர்கள் சிலருடன் மது அருந்தியுள்ளார். அப்போது, குமரேசன், மணிகண்டன் இருவருக்கிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த சண்டையில் ஆத்திரமடைந்த மணிகண்டன் கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து குமரேசனின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில், வழியால் துடித்த குமரேசனை, உடன் மது அருந்தியவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
நடந்த சம்பவம் பற்றி தகவலறிந்த காவல் துறையினர், குமரேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தம்பி மணிகண்டன் மற்றும் அவருடன் மது அருந்திய அனைவரையும் கைது செய்து காவல்நிலையத்தில் அடைத்தனர்.
திண்டிவனம் பகுதியில் மது போதையால் அண்ணனை தம்பி பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.