விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் உலகப் புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டை அமைந்துள்ளது. இங்கு ராஜாக் கோட்டை மற்றும் ராணிக் கோட்டை என இரண்டு வெவ்வேறு மலைகளின்மேல் கோட்டைகள் அமைந்துள்ளன. வெளி மாநிலத்தவர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டவரும் வியந்து விரும்பி பார்க்கும் சுற்றுலாத் தளமாக செஞ்சிக்கோட்டை திகழ்ந்து வருகிறது. இங்கு, ராஜா கோட்டை என்று அழைக்கப்படும் ராஜகிரியின் உச்சிக்கு செல்ல சுமார் 1020 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். இந்த மலை சுமார் 800 அடி உயரமுள்ள செங்குத்தான மலையாகும். கோட்டையின் உச்சிக்கு சென்று இயற்கையை ரசிப்பதற்காகவே பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் செஞ்சிக்கோட்டைக்கு வருவதுண்டு.
இந்த செஞ்சிக்கோட்டையின் மீது ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், இந்த கோவிலில் ஆலய ரத உற்சவம் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த வருடமும், ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோயிலில் ஆலய ரத உற்சவ விழா பிரம்மாண்டமாக நடைபெறுவதை சிறப்பிக்கும் வகையில் செஞ்சிக்கோட்டை வரும் சுற்றுலா பயணிகளுக்கு பத்து நாட்கள் இலவச அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, இந்த மாதம் மே 13’ம் தேதி துவங்கி வரும் 22’ம் தேதி வரைக்கும் சுற்றுலா பயணிகள் இலவசமாக செஞ்சிக்கோட்டையை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுவர்.
இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையில் செஞ்சிக்கோட்டையை கண்டுகளிக்க தொல்லியல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.