தமிழகமெங்கும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க மக்கள் ஊட்டியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், வருகின்ற சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டியில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
அதன் ஒருபகுதியாக, இந்த ஆண்டிற்கான கொடைவிழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. இந்த வருடம் கண்காட்சியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மலர்களைக் கொண்டு மலைரயில், குழந்தைகளுக்கு பிடித்த டிஸ்னி வேர்ல்டு, யானைகள், மிருகங்கள் என பலவிதமான அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி மே மாதம் 10ம் தேதி துவங்கி 10 நாட்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நடத்தப்படுகிறது.
ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 20 அடி உயரத்தில் டிஸ்னி வோர்ல்டு மலர் அலங்காரம் அழகாக செய்யப்பட்டுள்ளது. பல ஆயிரம் மலர்களை கொண்டு நீலகிரி மலை ரயில், காளான், ஆக்டோபஸ் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் உருவாக்கப்படவுள்ளது.
அதுபோன்று, ஊட்டி ரோஜா கண்காட்சியும் துவங்கியது. அங்கு பல வண்ண மலர்களைக்கொண்டு உருவாக்கிய யானை, புலி, மான், காட்டெருமை உள்பட பல விலங்குகளின் உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன.
ரோஜா கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியா டிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா சூரியகாந்தி, சப்னேரியா போன்ற பலவிதமான மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்களின் என பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.