இ-பாஸ் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது கொரோனா காலம்’தான். ஆமாங்க பலரும் கொரோனா காலகட்டத்தில், பக்கத்து ஊருக்கு, சொந்த ஊருக்கு போகணும்னாலும் இ-பாஸ் எடுத்தாதான் போகமுடியும்னு நிலை இருந்தது. தற்போது அந்த நிலைமாறி, தமிழ்நாட்டில் சுற்றுலா தளங்களுக்கு போகவேண்டும் என்றால் இ-பாஸ் எடுக்க வேண்டும்,
இ-பாஸ் பெற இணைய முகவரி : epass.tnega.org
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செல்ல விரும்புவோர், மேலே உள்ள வலைத்தளத்தில் பதிவு செய்து இ-பாஸை பெற்றுக் கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இனி கொடைக்கானல் செல்லும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படுவர். மேலும் இ பாஸ் தொடர்பான உதவிகளுக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் நியமனம செய்யப்பட்டுள்ளனர். இந்த வரைமுறை 07.05.2024 முதல் 30.06.2024 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
ஊட்டி செல்லவும் இதேபோன்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் பதிவு செய்வது அவசியம். இது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியிருப்பதாவது, இந்த இ-பாஸ் நடைமுறை என்பது சுற்றுலா பயணிகளுக்கு தடையில்லை. வாகனங்களை முறைப்படுத்தவே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது.
மேலும், அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெளி மாநில, வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம். இனி ஊட்டி, கொடைக்கானல் போகணும்னா இ-பாஸ் எடுக்கணும்னு ஞாபகம் வச்சிக்கோங்க.