வெயில் என்னப்பா இப்படி கொளுத்துதுனு ஊட்டிக்கு போகிறவர்களுக்கு குளுகுளுனு தமிழ்நாடு அரசு ஒரு அருமையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஆமாங்க, 100 ரூபாயில் ஊட்டியை சுற்றிபார்க்கலாம்.
கோடைகாலத்தில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த செலவில், பாதுகாப்பாக ஊர் சுற்றிப்பார்க்க “சிறப்பு சுற்றுப் பேருந்துகள்” இயக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், நீலகிரி மணடலம் சார்பாக செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தைக் குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நீலகிரி மண்டல வணிக மேலாளர் பிரகாஷ் அவர்கள் கூறியதாவது, “ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன், குறைந்த கட்டணத்தில் ஊட்டியை சுற்றிப்பார்க்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்தச் சிறப்பு சுற்றுப் பேருந்துகள், மத்தியப் பேருந்து நிலையத்தில் தொடங்கி தண்டர்வோர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச் மார்க் டீ மீயூசியம் மற்றும் ரோஜா பூங்கா ஆகிய இடங்களுக்குச் செல்கின்றது.
எப்படி 100 ரூபாய் டிக்கெட் வாங்குவது ?
இந்த சிறப்பு சுற்றுப்பேருந்துகளில் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி, நீங்கள் 100 ரூபாய் செலுத்தி பயண அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் பயணம் செய்யும் நாளை அந்த அட்டையில் குறித்து தருவார்கள். அட்டையில் குறித்த நாளில், மேற்கூறிய அனைத்து இடங்களுக்கும் நீங்கள் பயண கட்டணம் எதுவும் செலுத்தாமல் செல்லலாம். மேலும், சிறுவர்களுக்கு இந்த பயண அட்டை பெற 50 ரூபாய் மட்டும்தான். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை.
சுற்றுலாப் பயணிகள் தங்கள் விருப்பப்படி, ஒரே இடத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சுற்றிப் பார்க்கலாம். பின்பு, அங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்ல அதே பயண அட்டையைக் காட்டி, மற்ற சுற்றுப் பேருந்துகளில் வேறு இடங்களுக்குப் பயணிக்கலாம்.
இந்த சலுகைகள் அனைத்தும் ஒருநாள் மட்டுமே செல்லுபடியாகும். எனவே, ஒரு நாளில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை திட்டம் செய்து பயணம் செய்தால் சிறப்பாக இருக்கும். இந்த சிறப்பு திட்டமானது ஜூன் 10-ம் தேதி வரை செயலில் இருக்கும்.” என்றார்.