புதுச்சேரி மாநிலம் சுற்றுலாவிற்கு சிறந்த இடமாகும். இங்கு அரசு விடுமுறை நாட்கள் மட்டும் இல்லாமல் வார இறுதி நாட்களிலும் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வந்திருந்து நாட்களை கழித்து விட்டு செல்வது வழக்கம். சமீப காலமாக புதுச்சேரி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது விடுமுறை நாட்கள் என்பதாலும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
எனினும் மாநிலம் முழுவதும் புதுச்சேரி அரசால் சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்படாமல் இருக்க சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த அரசு கட்டண கழிப்பிடங்கள் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன. இங்கு வயதிற்கு ஏற்றார் போல் 5, 10, 15 ரூபாய் என வசூலிக்கப்படுகின்றன. இருப்பினும் கடந்த சில நாட்களாக இந்த கட்டணக் கழிவறைகளில் ரூபாய் 30 வரை வசூலிக்கப்படுகிறது என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
புதுச்சேரிக்கு வந்த ஆன்மீக பக்தர்கள் தலைமை செயலகம் அருகே உள்ள கழிவறையை பயன்படுத்திய போது அங்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது என புகார் எழுந்துள்ளது. இதனை அங்கிருந்த ஊழியரிடம் கேட்டபோது அவரும் சரியான பதில் அளிக்கவில்லை என சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த சுற்றுலாப் பயணிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் முற்றுகை செய்ததால் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.