புதுச்சேரி செல்லும் வழியில் வானூரை அடுத்து துருவை கிராமம் அமைந்துள்ளது. இந்த துருவை கிராமத்திலிருந்து புளிச்சபள்ளம் மற்றும் திண்டிவனம் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் கற்கள் பெயர்ந்து படுமோசமாக உள்ளது. இந்த சாலையை அருகில் உள்ள சுற்றுப்புற கிராம மக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சஞ்சீவி நகர், ஆலங்குப்பம், புதுநகர், துருவை, ஒட்டப்பாளையம் மக்களும், ஒழிந்தியாப்பட்டு, நயினார்பாளையம், காட்ராம்பாக்கம், கிளியனூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்களும் திண்டிவனம் மற்றும் ஆரோவில் பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்துகின்றனர். இந்த சாலையின் இரு பக்கமும் விவசாய நிலங்கள் உள்ளன. மக்கள் பயணிக்கும் வாகனங்களை தவிர்த்து டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மழைநீர் நிற்பதால் விபத்துக்கள் நடைபெறும் அவலம் உள்ளது. எனவே, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இந்த சாலையை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.