தீபாவளி பண்டிகையையொட்டி சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்பவர்களும், தங்கி படிக்கும் மாணவர்களும், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் தீபாவளியை கொண்டாட தங்கள் ஊருக்கு சென்று இருந்தனர். இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்ததை ஒட்டி ஊர்களுக்கு சென்று இருந்த மக்கள் அனைவரும் சென்னையை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் பல சுங்க சாவடிகளில் ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன.
இந்த நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள விக்கிரவாண்டி டோல்கேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் இரு பக்கங்களிலும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. இதனால் பல மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெரும்பான்மையான மக்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையே சென்னை வருவதற்கு பயன்படுத்துவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் மாவட்ட மக்கள் பலரும் ரயில்களிலும் பயணம் செய்து வருகின்றனர். ஆதலால் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடிகிறது. போக்குவரத்துத் துறை காவலர்களும் வாகனங்களை வரிசைப்படுத்தி சீர் செய்து அனுப்பி வைப்பதை பார்க்க முடிகிறது. இருப்பினும் நெரிசல் குறைந்தபாடில்லை. திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் கடும் நெரிசலுக்கு உள்ளாகினர்.
நெரிசல் காரணமாக மாற்றுப்பாதைகளில் செல்ல போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர். கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இன்று காலை முதல் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பாதையில் சென்றுள்ளதாக போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.