விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களுக்காக காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் பணியாற்றும் மொத்தம் 1,207 துாய்மைப் பணியாளர்கள் பயன்பெற உள்ளனர். இதில் விழுப்புரம் நகராட்சியில் 482 பேர், திண்டிவனம் நகராட்சியில் 217 பேர், கோட்டக்குப்பம் நகராட்சியில் 131 பேர் மற்றும் அனந்தபுரம், அரண்கண்டநல்லூர், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி, மரக்காணம், செஞ்சி ஆகிய பேரூராட்சிகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களும் அடங்குவர்.
விழுப்புரம் நகராட்சியின் சார்பில், பாலமுருகன் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் லட்சுமணன் எம்.எல்.ஏ., துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பி.ரபு, துணைத் தலைவர் சித்திக் அலி, நகராட்சி கமிஷனர் வசந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வளவனூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லட்சுமணன் எம்.எல்.ஏ., காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், செயல் அலுவலர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் நகராட்சியின் சார்பில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பானுமதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
செஞ்சி பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்த நிலையில், மஸ்தான் எம்.எல்.ஏ., துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.