கோட்டகுப்பம் அருகில் தந்திராயன்குப்பம் கடற்பகுதி அமைந்துள்ளது. கடற்கரை ஓரத்தில் 5 துண்டுகளாக மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியதை அங்கிருந்த காளிதாஸ் எனும் மீனவர் கண்டுள்ளார். பின்பு அங்குள்ள மீனவர்களுக்கும் தகவல் தெரிவித்து, கரை ஒதுங்கிய மர்ம பொருளை சேகரித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கரை ஒதுங்கிய மர்ம பொருளை ஆய்வு செய்தபோது அது திமிங்கலத்தின் எச்சம், அதாவது அம்பர்கிரீஸ் எனும் பொருள் என தெரிய வந்தது.
மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்களை கல்கத்தாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த அரியவகை பொருள் திமிங்கலத்தின் எச்சம் என அறியப்பட்டதால் இதனுடைய மதிப்பு சுமார் ஐந்து கோடி வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்பு கூனிமேடு கடல் பகுதியில் திமிங்கலத்தின் எச்சம் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.