மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 147 உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
பெட்ரோலை ஏற்றிக் கொண்டு கானோ மாகாணத்திலிருந்து ஜிகாவா மாகாணத்தின் மாஜியா நகர நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்த லாரி விபத்துக்குள்ளாகி நின்றது. சுமாா் 110 கி.மீ. தொலைவுக்கு மேல் அந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநா் அதன் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தைத் தொடா்ந்து லாரியிலிருந்து கசிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
அப்போது அந்த பெட்ரோல் லாரி திடீரென வெடித்துச் சிதறி, மிகப் பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது. இதில் 97 போ் உடனடியாக எரிந்து சாம்பலாகினா். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களில் மேலும் 50 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். பெட்ரோல் லாரி வெடித்து தீ அதிவேகமாக பரவியதால் அங்கிருந்தவா்களால் உடனடியாக தப்பிச் செல்ல முடியவில்லை. எனவே, இந்த விபத்தில் ஏராளமானவா்கள் காயமடைந்துள்ளனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் கூறினா்.
ஆப்பிரிக்காவிலேயே மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நைஜீரியாவில், சாலை விதிகள் சரியாக பின்பற்றப்படாததால் சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. அதிலும், இதுபோன்ற விபத்துகளுக்குப் பிறகு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாளிகளில் எரிபொருளைச் சேகரிக்கும் வழக்கமும் அதிகமாகிவருகிறது. பெட்ரோல், டீசலுக்கு அளித்து வந்த மானியத்தை அரசு விலக்கிக் கொண்டதால் அவற்றில் விலைகள் கடந்த ஓராண்டில் மட்டும் மும்மடங்காகியுள்ளன. இதன் காரணமாக, லாரி விபத்துகளைப் பயன்படுத்தி எரிபொருளை சேகரிப்பதில் மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இந்தச் சூழலில், மாஜியா நகரில் தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல் லாரி வெடி விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.