மயிலம் அடுத்த கோலியனூர் பகுதியில் நான்கு வழிச்சாலைத் திட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டப் பணிகளால் அருகில் உள்ள நெடுஞ்சாலைகள் மிகுந்த சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். விக்கிரவாண்டி கும்பகோணம் நான்கு வழிச்சாலை திட்டப் பணிகள் துவங்கப்பட்டு பல வருடங்களாக முடிக்கப்படாமல் இழுபறியில் இருந்து வருகிறது. சாலைப் பணிகள் சரிவர முடிக்கப்படாத பல இடங்களில் கனமழை பெய்வதால் அருகில் உள்ள சாலைகளும் மிகுந்த சேதம் அடைந்துள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக கோலியனூர் கூட்ரோடு தொடங்கி கண்டரக்கோட்டை வரை பல இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. கோலியனூர் அருகில் சுந்தரிப்பாலம் பகுதியில் புதுச்சேரி நான்கு வழிச்சாலையில் புதிய மேம்பாலம் இருப்பதால் அதன் கீழ் பகுதியில் தற்காலிகமாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. இதில் வாகனங்களும் திருப்பிவிடப்பட்டன, இருப்பினும் அங்குள்ள மண் சாலைகள் குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ளதோடு மழையால் சேரும் சகதியுமாக உள்ளது. இதனால் சமீப காலமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு தற்காலிகமாக எம்சாண்ட் மண்ணும் கொட்டப்பட்டது. ஆனாலும், பெய்துவரும் கனமழையில் சாலையில் இருந்த மண் அரித்துச் செல்லப்பட்டு, குண்டும் குழியுமாக சாலைகள் மாறி உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. ஆகையால் கோலியனுர் அருகே தொடங்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வாகன ஓட்டிகளின் சிரமங்களை தவிர்க்க பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.