மரக்காணம் பகுதியில் 19க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீன் பிடிக்கும் தொழிலை முதன்மையாக செய்து வருகின்றனர். மீனவர்கள் கட்டுமரம், பைபர் படகு போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் மீன் பிடி தடைக்காலம் நேரத்திலும், மழைக்காலங்களில் நிவாரண நிதியாகவும் ரூபாய் பதினோராயிரம் வழங்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் ரூபாய் 5000 மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் பல மீனவ குடும்பங்களுக்கு இந்த பணம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கும் நிலையில் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், ஒரு நபருக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியும் பல மீனவர்கள் குடும்பங்களுக்கு சரியாக வழங்கப்படவில்லை என மீனவ கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மரக்காணத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களுக்கு வழங்க வேண்டிய அரசு நிதியை சரியாக உடனடியாக வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை எடுத்தனர்.