திண்டிவனத்தில் போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில், காரில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதனை கடத்தியதாக ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி. பிரகாஷ் உத்தரவின் பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த TN 54 B 4498 என்ற பதிவு எண்ணைக் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சுமார் 21 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் இருந்த திண்டிவனம் ரோஷணை பகுதியைச் சேர்ந்த கிடங்களான் என்ற சரண்ராஜ் (35) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் தெரிவித்ததாவது, கைது செய்யப்பட்ட சரண்ராஜ் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, அடிதடி, டாஸ்மாக் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் திண்டிவனத்தில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் மேற்கொண்டு வரும் கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.