திண்டிவனத்தில் ரூ.27.51 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் வராததால், வணிக வளாகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
தற்போது திண்டிவனத்திற்கு தினமும் இயக்கப்படும் சுமார் 1,300 பேருந்துகளில் 750 பேருந்துகள் மட்டுமே புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. மீதமுள்ள பேருந்துகள் பழைய மேம்பாலம் கீழ் உள்ள பேருந்து நிலையத்திலேயே நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 67 கடைகளில் 7 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருவதுடன், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.