விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நடத்திய போராட்டத்தால் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில், திண்டிவனத்தில் மூடியிருந்த டாஸ்மாக் கடையை திறக்கக் கோரி மதுப்பிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.20 வசூலித்ததாக எழுந்த புகாரின் பேரில், ஜூன் 15-ஆம் தேதி நான்கு விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் நண்பகல் 12 மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு வந்திருந்த மதுப்பிரியர்கள், கடைகள் மூடியிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்து, அவற்றை உடனடியாக திறக்க வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திண்டிவனம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே விழுப்புரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நான்கு விற்பனையாளர்கள் மீதான நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று பிற்பகல் சுமார் 12.45 மணியளவில் திண்டிவனத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடைகள் திறந்தவுடன் மதுப்பிரியர்கள் ஆர்வத்துடன் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.