விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள செய்யாங்குப்பம் கிராமத்தில், விவசாயியின் வீட்டில் புகுந்த மர்ம நபர் ரூ.15 லட்சத்தில் ரூ.9.5 லட்சம் மட்டும் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்யாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜி, குடும்பத்துடன் உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்கச் சென்றிருந்தார். வீட்டின் சாவியை படிக்கட்டுக்குக் கீழ் மறைத்து வைத்திருந்ததை அறிந்த மர்ம நபர், வீட்டைத் திறந்து உள்ளே சென்று அலமாரியில் இருந்த பணத்தை எடுத்துள்ளார்.
அலமாரியில் இருந்த ரூ.15 லட்சத்தில் ரூ.9.5 லட்சத்தை மட்டும் திருடிச் சென்ற நிலையில், மீதமிருந்த பணமும் 7 பவுன் தங்க நகையும் அப்படியே இருந்தது. வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர் பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து மரக்காணம் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.