மதுராந்தகத்தில் நடைபெற்ற த.வெ.க.வில் பல்வேறு கட்சியினர் இணையும் விழாவை முன்னிட்டு, திண்டிவனம் வழியாக சென்னை நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளின் காரணமாக, புதுச்சேரி, திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரிகள் நேற்று மாலை 4.30 மணியளவில் திண்டிவனம்–புதுச்சேரி சாலை மற்றும் திண்டிவனம்–விழுப்புரம் சாலை உள்ளிட்ட இடங்களில் போலீசாரால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் அவதியடைந்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், மதுராந்தகத்தில் நடைபெற்ற த.வெ.க. கூட்டம் முடியும் வரை சென்னை நோக்கிச் செல்லும் லாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், கூட்டம் நிறைவடைந்த பின்னர் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.