திண்டிவனத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நகரி வரை அமைக்கப்படும் புதிய அகல ரயில் பாதை திட்டப் பணிகள் ஆர்.கே.பேட்டை எல்லையை நெருங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் முதல் முறையாக ரயில் சேவையை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த 180 கிலோமீட்டர் நீளமுள்ள திட்டம், திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை வழியாக ஆந்திர மாநிலம் நகரியை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை வட தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பல ஆண்டுகள் தாமதமான நிலையில், ஆந்திர அரசின் முயற்சியால் திட்டப் பணிகள் மீண்டும் வேகமடைந்தன. குறிப்பாக வாலாஜா ரோடு–நகரி இடையேயான 70 கிலோமீட்டர் பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பள்ளிப்பட்டு தாலுகாவில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதட்டூர்பேட்டையில் புதிய ரயில் நிலையம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், சோளிங்கர் அருகே ரயில் பாதை அமைக்கும் பணிகளும் முன்னேறி வருகின்றன.
தற்போது இந்த ரயில் பாதை பணிகள் ஆர்.கே.பேட்டை எல்லையை நெருங்கியுள்ள நிலையில், புத்தேரி பகுதியில் தொடக்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் ஆர்.கே.பேட்டை முழுவதும் ரயில் பாதை பணிகள் தொடங்கி, முதல் முறையாக ரயில் சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.